Online Bible

- Reklamy -

எபிரெயர் 5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 இஸ்ரயேலர்களின் தலைமை மதகுரு ஒவ்வொருவரும் மனிதர்களில் இருந்து தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்கள் இறைவனுக்கு காணிக்கைகளையும் பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக, இறைவனுக்குரிய விடயங்களில் மக்களின் சார்பாக சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்கள்.

2 தலைமை மதகுரு தானும் பலவீனனானபடியால் அறியாமையில் இருக்கின்றவர்களுடனும், வழிவிலகிச் செல்கின்றவர்களுடனும் தயவுடன் நடந்துகொள்கிறவனாய் இருக்கின்றான்.

3 இதனாலேயே அவன் தன்னுடைய பாவங்களுக்காகவும், மக்களின் பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்த வேண்டியதாயிருக்கிறது.

4 இந்த மேன்மையான நிலையை ஒருவனும் தானாகவே அடைய முடியாது. ஆரோனைப் போலவே, அவனும் இறைவனால் அழைக்கப்பட வேண்டும்.

5 அவ்விதமாகவே கிறிஸ்துவும் தலைமை மதகுருவாகும் அந்த மகிமையைத் தாமே தமது விருப்பத்தின் பேரில் தமதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக் குறித்து சொல்லியிருக்கின்றதாவது, “நீர் என்னுடைய மகன், இன்று நான் உமக்குத் தந்தையானேன்.”

6 இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக் குறித்து, “நீர் என்றென்றும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி மதகுருவாய் இருக்கின்றீர்” என்று சொல்லியிருக்கின்றார்.

7 இயேசு பூமியில் இருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லமையுள்ளவரை நோக்கி சத்தமாய்க் கதறி, கண்ணீர்விட்டு தமது வேண்டுதல்களைச் சொல்லி மன்றாடினார். அவருடைய பயபக்தியான அர்ப்பணிப்பின் காரணமாக அவருடைய மன்றாடுதல் கேட்கப்பட்டது.

8 இயேசு இறைவனின் மகனாய் இருந்தும்கூட தாம் அனுபவித்த பாடுகளின் மூலமாகவே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.

9 இப்படியாக இயேசு முழு நிறைவெய்திய பின்னர், தமக்குக் கீழ்ப்படிகின்ற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் மூலாதாரம் ஆகினார்.

10 இதற்காகவே அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி தலைமை மதகுருவாய் இருப்பதற்காக இறைவனாலே நியமிக்கப்பட்டார்.


வழி விலகாதிருக்க எச்சரிக்கை

11 இதைக் குறித்து சொல்ல நமக்கு அதிகம் உண்டு. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வதில் மந்தமாய் இருப்பதனால், இதை விளக்குவது கடினமாயிருக்கிறது.

12 உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையிலே நீங்கள் இருக்கின்றீர்கள். திட உணவை அருந்த முடியாதவர்களாய், மீண்டும் பாலை அருந்தும் நிலைக்குத் திரும்பிவிட்டீர்கள்.

13 பாலை அருந்துகின்றவன் இன்னும் குழந்தையாகவே இருக்கின்றான். இதனால் அவன் நீதியைப் பற்றிய படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கின்றான்.

14 முதிர்ச்சி அடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியின் மூலமாக, தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு

பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.

அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.

Tamil Readerʼs Version™ New Testament

Copyright © 2002, 2022 by Biblica, Inc.

Used with permission.

All rights reserved worldwide.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy