எபிரெயர் 4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்புஇறைவனுடைய மக்களுக்கான ஓய்வு 1 ஆகவே இறைவன் அளிக்கும் இளைப்பாறுதலை நாம் பெறுவோம் என்ற வாக்குறுதி இன்னும் செல்லுபடியாகும் என்பதனால், உங்களில் ஒருவரும் அதை இழந்து போகாதவாறு நாம் எல்லோரும் எச்சரிக்கையாய் இருப்போமாக. 2 இஸ்ரயேலர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது போலவே நமக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்ட செய்தியோ அவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை. ஏனெனில் செய்தியைக் கேட்டவர்கள் விசுவாசித்தவர்களோடு ஒன்றுபடவில்லை. 3 “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை என்று என்னுடைய கோபத்திலே நான் ஆணையிட்டு அறிவித்தேன்” என்று இறைவன் சொன்னது நிறைவேறிற்று. ஆனால், விசுவாசம் உள்ளவர்களாகிய நாமோ, உண்மையாகவே இப்போது அந்த இளைப்பாறுதலுக்குள் உட்பிரவேசிக்கிறோம். அப்படியிருந்தும் இறைவனுடைய செயல்கள் உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே நிறைவாக்கப்பட்டு இருக்கின்றன. 4 ஏனெனில் ஏழாம் நாள் குறித்து ஓரிடத்தில், “ஏழாம் நாளில் இறைவன் தாம் செய்துகொண்டிருந்த எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 5 மேலும் மேற்கூறிய வசனங்களில், “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை” என்றும் இறைவன் சொல்லியிருக்கின்றார். 6 முற்காலத்தில் அறிவிக்கப்பட்ட நற்செய்தியை கேட்டவர்களின் கீழ்ப்படியாமையால் அவர்கள் அந்த ஓய்வுக்குள் உட்பிரவேசிக்க முடியாவிட்டாலும், இன்னும் வேறு சிலருக்கு சந்தர்ப்பம் உள்ளது. 7 ஆகையால் இறைவன் அதற்கென வேறொரு நாளை நியமித்தார். அதையே, “இன்று” எனக் குறிப்பிடுகிறார். அதனால்தான் நீண்ட காலத்திற்குப் பின்பு இறைவன், தாவீதின் மூலமாக பேசியபோது முன்பு கூறப்பட்டபடியே, “இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்” என்றார். 8 யோசுவா அவர்களுக்கு அந்த உண்மையான இளைப்பாறுதலை முன்பே கொடுத்திருந்தால், பிற்காலத்தில் வரப்போகும் இன்னொரு நாளைப்பற்றி இறைவன் சொல்லியிருக்க மாட்டார். 9 ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு இனிமேல்தான் வர வேண்டியதாயிருக்கிறது. 10 ஏனெனில், இறைவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் ஒருவன், இறைவன் ஓய்ந்திருந்தது போலவே தனது வேலையிலிருந்தும் ஓய்ந்திருக்கிறான். 11 ஆகையால், அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் வகையில், நாம் ஊக்கத்துடன் முயற்சி செய்வோம். முன்னோர்களுடைய கீழ்ப்படியாமையைப் பின்பற்றி, நாம் ஒருவரும் விழுந்து போகக் கூடாது. 12 ஏனெனில், இறைவனுடைய வார்த்தை உயிருள்ளதும், செயலாற்றல் உடையதுமாய் இருக்கின்றது. அது இரு பக்கமும் கூர்மையுள்ள வாளைவிடக் கூர்மையானது. அது ஆத்துமாவையும், ஆவியையும், எலும்பின் மூட்டுக்களையும், எலும்பின் உள் இழையங்களையும் பிரிக்கத்தக்கதாய் துளைத்துச் செல்கிறது; அது இருதயத்தின் சிந்தனைகளையும், உள்நோக்கங்களையும் நிதானித்துத் தீர்ப்பிடுகிறது. 13 அத்துடன் படைக்கப்பட்ட எந்த ஒரு உயிரினமும் அவருடைய பார்வையில் இருந்து மறைக்கப்படவில்லை. நாம் செய்த எல்லாவற்றிற்கும் நாம் இறைவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. அவரது கண்களுக்கு முன்பாக எதுவுமே மறைக்கப்படாமலும் எல்லாமே பகிரங்கமாயும் இருக்கின்றன. இயேசுவே தலைமை மதகுரு 14 ஆதலால் பரலோகத்திற்குள் சென்றிருக்கின்ற ஒரு தலைமை மதகுரு நமக்கு இருக்கின்றார். அவர் இறைவனுடைய மகனான இயேசுவே. ஆகவே நாம் விசுவாச அறிக்கையில் ஒப்புக்கொண்டவற்றை உறுதியாய் பற்றிக்கொள்வோமாக. 15 ஏனெனில் நமக்கிருக்கின்ற இந்த தலைமை மதகுரு நம்முடைய பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட முடியாதவர் அல்ல. அவரோ நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதனைகளின் மூலமாகச் சென்றவர். ஆனால், அவர் பாவம் செய்யவில்லை. 16 ஆகவே நாம் இரக்கத்தைப் பெறவும், சரியான நேரத்தில் எமக்கு உதவக்கூடிய கிருபையைப் பெற்றுக்கொள்ளவும் இறைவனின் கிருபையின் அரியணையை துணிவுடன் அணுகுவோமாக. |
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.
Biblica, Inc.