Online Bible

- Reklamy -

அப்போஸ்தலர் 25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு


பெஸ்துவின் முன் பவுல்

1 அந்த மாகாணத்திற்கு புதிய ஆளுநர் பெஸ்து வந்துசேர்ந்து மூன்று நாட்களின் பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான்.

2 அங்கே தலைமை மதகுருக்களும், யூதத்தலைவர்களும் அவனைச் சந்தித்து பவுலுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்து, கெஞ்சி மன்றாடி,

3 பவுலை மீண்டும் எருசலேமுக்குக் கொண்டுவந்து தங்களுக்கு ஒரு சலுகை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். ஏனெனில், வழியிலேயே பவுலை மறைந்திருந்து கொல்ல அவர்கள் சூழ்ச்சி செய்திருந்தார்கள்.

4 பெஸ்து அவர்களுக்குப் பதிலளித்து, “பவுல் செசரியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான். விரைவில் நானும் அங்கே போக இருக்கின்றேன்.

5 பவுல் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் தலைவர்களில் சிலர் என்னுடன் வந்து, அங்கேயே வைத்து அவனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவன்மீது சுமத்தட்டும்.” என்றான்.

6 எட்டு அல்லது பத்து நாட்கள் அவர்களுடன் அவன் தங்கிவிட்டு செசரியாவுக்குச் சென்றான். மறுநாள் அவன் நீதிமன்றத்தைக் கூட்டி, நீதி ஆசனத்தில் அமர்ந்து பவுலைத் தனக்கு முன்பாகக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான்.

7 பவுல் அங்கே வந்தபோது, எருசலேமிலிருந்து வந்திருந்த யூதர்கள் அவனைச் சுற்றி நின்றார்கள். அவர்கள் அவன்மீது மிகக் கடுமையான அநேக குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். ஆனாலும், அவர்களால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை.

8 அப்போது பவுல், “நான் யூதருடைய நீதிச்சட்டத்திற்கு எதிராகவோ, எருசலேம் ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசர் சீசருக்கு எதிராகவோ எந்தக் குற்றமும் செய்யவில்லை” என தனது தரப்பு வாதத்தை முன்வைத்தான்.

9 ஆயினும் பெஸ்து, யூதர்களுடைய ஆதரவைப் பெற்றுக்கொள்ள விரும்பி, “நீ எருசலேமுக்கு வந்து, அங்கே எனக்கு முன்பாக இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்து விசாரணை செய்யப்படுவதற்கு உடன்படுகிறாயா?” என பவுலிடம் கேட்டான்.

10 அதற்கு பவுல், “முறைப்படி விசாரணை செய்யப்பட வேண்டிய நீதிமன்றமாகிய சீசருடைய நீதிமன்றத்துக்கு முன்பாக நான் இங்கே ஏற்கெனவே நின்று கொண்டிருக்கின்றேனே! இங்கேயே நான் விசாரணை செய்யப்பட வேண்டும். நான் யூதருக்கு எதிராக எவ்வித குற்றமும் செய்யவில்லை என்பதை நீர் நன்றாய் அறிவீர்.

11 ஆயினும், மரணதண்டனை பெறுவதற்குரிய குற்றம் எதையாகிலும் நான் செய்திருந்தால், நான் மரணிப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் எனக்கு எதிராக இந்த யூதர்களால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லையென்றால், அவர்களிடம் என்னை ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. இத்தால் பேரரசர் சீசரிடம் என் விசாரணையை நான் மேன்முறையீடு செய்கின்றேன்” என்றான்.

12 பெஸ்து தனது ஆலோசகர் சபையினருடன் கூடி ஆராய்ந்தபின் பவுலிடம், “நீ பேரரசர் சீசரிடம் மேன்முறையீடு செய்திருக்கின்றாய், பேரரசர் சீசரிடமே நீ போவாய்” என்றான்.


பெஸ்துவும் அகிரிப்பா அரசனும்

13 சில நாட்களின் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும் பெஸ்துவுக்கு வரவேற்பு அளித்திட செசரியாவுக்கு வந்தார்கள்.

14 அவர்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்ததால், பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து அவர்களுடன் கலந்துரையாடினான். அவன் அரசனிடம், “பேலிக்ஸ் தீர்ப்பு வழங்காது விட்டுச் சென்ற சிறைக் கைதி ஒருவன் இங்கே இருக்கின்றான்.

15 நான் எருசலேமுக்குப் போனபோது தலைமை மதகுருக்களும் யூத சமூகத் தலைவர்களும் அவனுக்கு விரோதமாய் குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவந்து, அவனைக் குற்றவாளியாய் தீர்க்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.

16 “அதற்கு நான், ‘ஒருவன், தன்மீது குற்றம் சாட்டுகின்றவர்களை நீதிமன்றத்தில் நேருக்கு நேராகச் சந்தித்து, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிரான, தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதைச் செய்வதற்கு முன் எவரையும் குற்றம் சாட்டுபவர்களிடம் கையளிப்பது ரோமரின் வழக்கம் அல்ல’ என்று அவர்களுக்குச் சொன்னேன்.

17 அதன்படி அவர்கள் இங்கே வந்து சந்தித்தபோது நான் தாமதப்படுத்தாமல் மறுநாளே நீதிமன்றத்தைக் கூட்டி, நீதி ஆசனத்தில் அமர்ந்து, அவனைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டேன்.

18 அவன்மீது குற்றம் சாட்டியவர்கள் எழுந்து நின்று தமது தரப்பினரின் வாதத்தை முன்வைத்தபோது, நான் எதிர்பார்த்த பயங்கரமான குற்றங்கள் எதனையும் அவர்கள் அவன்மீது சுமத்தவில்லை.

19 மாறாக அவர்கள் தங்களுடைய சொந்த மதத்தைக் குறித்தும், உயிரோடு இருப்பதாகப் பவுல் வலியுறுத்திக் கூறும் இயேசு என்னும் இறந்துபோன ஒருவரைக் குறித்துமே கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள்.

20 இப்படிப்பட்ட காரியங்களை எப்படி விசாரணை செய்வது என்று தெரியாமல் நான் இருந்தேன். ஆகவே அவனிடம் நான், ‘நீ எருசலேமுக்குப் போய் இந்தக் குற்றச்சாட்டுக்களைப் பற்றி அங்கே விசாரணை செய்யப்பட உடன்படுகிறாயா?’ என்று கேட்டேன்.

21 ஆனால் பவுலோ பேரரசர் சீசருடைய தீர்ப்புக்காக மேன்முறையீடு செய்து, அதுவரை தன்னைக் காவலில் வைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டான். எனவே அவன் சீசரிடம் அனுப்பப்படும் வரைக்கும், அவனைத் தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டேன்” என்றான்.

22 அப்போது அகிரிப்பா அரசன் பெஸ்துவிடம், “அந்த மனிதன் சொல்வதை நானும் கேட்க விரும்புகிறேன்” என்றான். அதற்கு அவன், “நாளைக்கே அவன் பேசுவதை நீர் கேட்கலாம்” என்றான்.


அகிரிப்பாவின் முன் பவுல்

23 மறுநாள் அகிரிப்பா அரசனும் பெர்னிக்கேயாளும், பெரும் அரச ஆடம்பரத்துடன், உயர் படைத்தளபதிகளும் பட்டணத்தின் உயர் மதிப்புக்குரிய மனிதர்களும் சூழ்ந்துவர, பார்வையாளர் அரங்கத்திற்குள் வந்தார்கள். பின்னர் பெஸ்து கட்டளையிட, பவுல் உள்ளே கொண்டுவரப்பட்டான்.

24 அப்போது பெஸ்து, “அகிரிப்பா அரசர் அவர்களே! இங்கே எங்களோடு இருப்பவர்களே! நீங்கள் அவதானிக்கின்ற இந்த மனிதனைக் குறித்து அனைத்து யூத சமூகத்தவர்களும் எருசலேமில் உள்ளவர்களும் இங்கே செசரியாவில் உள்ளவர்களும்கூட, என்னிடம் மனு சமர்ப்பித்து, ‘இவன் இனியும் உயிர் வாழக் கூடாது’ என்று கூக்குரலும் இட்டார்கள்.

25 ஆனால் மரணதண்டனை பெறுவதற்குத் தகுதியான எதையும் இவன் செய்யவில்லை என்று நான் கண்டுகொண்டேன். ஆனால் இவனாகவே ரோமப் பேரரசர் சீசருக்கு மேன்முறையீடு செய்திருக்கின்றபடியால், நான் இவனை ரோம் நகருக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன்.

26 ஆனாலும் இவனைப்பற்றி என்னை ஆள்பவராகிய பேரரசர் சீசருக்கு எழுதுவதற்குத் தீர்க்கமான காரணம் எதுவும் என்னிடம் இல்லை. எனவேதான், நான் இப்போது உங்கள் எல்லோருக்கும் முன்பாக விசேடமாக அகிரிப்பா அரசே! உமக்கு முன்பாக இவனைக் கொண்டுவந்திருக்கிறேன். இந்த முன்விசாரணையின் முடிவில் இவனைப்பற்றி எழுதுவதற்கு ஏதாவது எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

27 ஒரு கைதிக்கு எதிரான தெளிவான குற்றப் பட்டியல் இல்லாமல், அவனை அனுப்புவது நியாயமற்றதாக எனக்குத் தோன்றுகின்றது” என்றான்.

இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு

பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.

அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.

Tamil Readerʼs Version™ New Testament

Copyright © 2002, 2022 by Biblica, Inc.

Used with permission.

All rights reserved worldwide.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy