1 தீமோ 2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்புவழிபாடு பற்றிய அறிவுரை 1 நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்வதாவது; முதன்மையாக எல்லா மக்களுக்காகவும் வேண்டுதல் செய்யுங்கள், மன்றாடுங்கள், பரிந்து பேசுங்கள், நன்றி செலுத்துங்கள். 2 அரசர்களுக்காகவும் அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறைபக்தியும் பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும் அமைதியுமான வாழ்க்கை வாழ முடியும். 3 இதுவே சரியானதும், நமது இரட்சகராகிய இறைவனுக்குப் பிரியமானதுமாய் இருக்கின்றது. 4 எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதும், சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பெற்று உணர வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம். 5 ஏனெனில் இறைவன் ஒருவரே, இறைவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் நடுவரும் ஒருவரே. அவரே மனிதனாக வந்த கிறிஸ்து இயேசு. 6 எல்லா மனிதர்களையும் மீட்பதற்கு ஈடான ஒன்றாக அவர் தன்னையே கொடுத்தார். இதுவே குறித்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட சான்றாக இருக்கின்றது. 7 இதற்காகவே நான் போதிக்கின்றவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் கற்றுக் கொடுக்கின்றவனாகவும் நியமிக்கப்பட்டேன். நான் சொல்வது உண்மை, பொய் சொல்லவில்லை. 8 எனவே ஆண்கள் கோபம் கொள்ளாதவர்களாகவும், வாக்குவாதம் செய்யாதவர்களாகவும் பரிசுத்த கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலும் மன்றாட வேண்டும் என்பதே என் விருப்பம். 9 அதேபோல பெண்கள் அடக்கமானதும், ஒழுக்கம் மற்றும் தகுதியானதுமான ஆடைகளையே அணிய வேண்டும் என்று விரும்புகிறேன். விதவிதமான சிகை அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலையுயர்ந்த ஆடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல், 10 இறைவனை ஆராதிக்கின்ற பெண்களுக்குத் தகுந்தபடி, நற்செயல்களால் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும். 11 பெண்ணானவள் அமைதியாகவும், மிகுந்த பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 12 போதிக்கவோ, ஆண்களுக்குமேல் அதிகாரம் செலுத்தவோ பெண்ணுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். அவள் அமைதியாயிருக்க வேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் உருவாக்கப்பட்டான். அதற்குப் பின்பே ஏவாள் உருவாக்கப்பட்டாள். 14 மேலும் ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு பாவத்திற்கு ஆளானாள். 15 ஆனாலும் விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் பெண்ணானவள் நிலைத்திருந்தால் பிரசவத்தின் ஊடாக மீட்கப்படுவாள். |
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.
Biblica, Inc.