Online Bible

- Reklamy -

1 தெச 5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு


கர்த்தருடைய நாள்

1 மேலும், பிரியமானவர்களே இவை நிகழப் போகின்ற காலங்களையும் வேளைகளையும் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை.

2 ஏனெனில் இரவில் திருடன் வருகின்றதைப் போலவே கர்த்தருடைய நாள் வரும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

3 “இதோ சமாதானம் பாதுகாப்பு” என்று மக்கள் சொல்லிக் கொண்டிருக்கையில், கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி வருவது போல, திடீரென அவர்கள்மீது பேரழிவு வரும். அவர்களால் தப்பித்துக்கொள்ள முடியாது.

4 ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருப்பவர்கள் அல்ல. அதனால், அந்த நாள் ஒரு திருடனின் வருகையைப் போல் உங்களை வியப்பிற்குள்ளாக்காது.

5 நீங்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கும் பகலுக்கும் சொந்தமானவர்களாய் இருக்கின்றீர்கள். நாம் இரவுக்கோ இருளுக்கோ சொந்தமானவர்கள் அல்ல.

6 ஆகவே நாம் தூங்குகின்ற மற்றவர்களைப் போல் இராமல், விழிப்புடனும் நிதானத்துடனும் இருப்போமாக.

7 ஏனெனில் நித்திரை செய்கின்றவர்கள் இரவில் நித்திரை செய்வார்கள். மதுவெறிகொள்கின்றவர்கள் இரவிலே குடிபோதையில் இருப்பார்கள்.

8 ஆனால் நாமோ பகலுக்கு உரியவர்களாய் இருக்கின்றபடியால் நிதானத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், இரட்சிப்பின் எதிர்பார்ப்பைத் தலைக் கவசமாகவும் அணிந்துகொள்வோம்.

9 ஏனெனில் இறைவன் நம்மைத் தமது கோபத்தின் தண்டனையை பெறுவதற்காக அன்றி, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவே நியமித்திருக்கிறார்.

10 நாம் உயிருடன் இருந்தாலும், மரணம் அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படி நமக்காகவே அவர் உயிர் துறந்தார்.

11 ஆகையால் நீங்கள் இப்போது செய்துவருவது போலவே, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, ஒருவர் மற்றவரைக் கட்டி எழுப்புங்கள்.


இறுதி அறிவுறுத்தல்கள்

12 பிரியமானவர்களே, இப்போதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்வதாவது, உங்கள் மத்தியில் கடினமாக உழைத்து, கர்த்தரில் உங்களை வழிநடத்தி, உங்களுக்குப் புத்திமதி சொல்கின்றவர்களை மதித்து நடவுங்கள்.

13 அவர்களுடைய உழைப்புக்காக, அவர்கள்மீது அதிக அன்பு காட்டி அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள்.

14 பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்வதாவது, ஒழுங்கீனமாய் இருப்பவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை ஆறுதல்படுத்துங்கள். பலவீனமாய் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். அனைவரிடமும் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்.

15 ஒருவரும் தீமையான செயலுக்குப் பதில் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக, எப்போதும் நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்ய முழு முயற்சி எடுங்கள். அதையே மற்ற எல்லோருக்கும் செய்யுங்கள்.

16 எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.

17 இடைவிடாது மன்றாடுங்கள்.

18 எல்லா சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள். இதுவே கிறிஸ்து இயேசுவின் ஊடாக நீங்கள் செய்ய வேண்டிய உங்களுக்கான இறைவனின் சித்தமாய் இருக்கின்றது.

19 ஆவியானவரின் அனலை அணைத்து விடாதீர்கள்.

20 சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யாமல்,

21 எல்லாவற்றையும் பரிசீலித்துப் பாருங்கள். நல்லதைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்.

22 எல்லாவிதமான தீயசெயல்களையும்விட்டு விலகியிருங்கள்.

23 சமாதானத்தின் இறைவன் தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்வரை, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றம் சாட்டப்படாததாகக் காக்கப்படுவதாக.

24 உங்களை அழைக்கின்றவர் நம்பிக்கைக்குரியவர், அவர் அப்படியே செய்வார்.

25 பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள்.

26 இறைவனுடைய மக்கள் அனைவருக்கும், பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்துதல் தெரிவியுங்கள்.

27 இந்தக் கடிதத்தை விசுவாசிகள் அனைவருக்கும் வாசித்துக் காண்பிக்கும்படி, கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

28 நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென்.

இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு

பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.

அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.

Tamil Readerʼs Version™ New Testament

Copyright © 2002, 2022 by Biblica, Inc.

Used with permission.

All rights reserved worldwide.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy