Online Bible

- Reklamy -

சங்கீதம் 45 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


சங்கீதம் 45
“லீலிமலர்கள்” என்ற சுருதியிலே வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட திருமணப் பாடலாகிய சங்கீதம்.

1 அரசனைப் புகழ்ந்து, நான் கவிகளைப் பாடும்போது, அதின் உயர்வான கருப்பொருளால் என் உள்ளம் பொங்குகிறது; என் நாவு சிறந்த ஓர் எழுத்தாளனின் எழுதுகோல்.

2 மனுஷரெல்லாரிலும் அழகுமிக்கவர் நீரே, இறைவன் என்றென்றுமாய் உம்மை ஆசீர்வதித்திருப்பதால், உமது உதடுகளில் கிருபை பொழிகிறது.

3 வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்; மகிமையினாலும் மகத்துவத்தினாலும் உம்மை உடுத்திக்கொள்ளும்.

4 உண்மையும் தாழ்மையும் நீதியும் உயர, உமது மகத்துவத்தில் வெற்றியுடன் விரைந்து வாரும்; உமது வலதுகரம் பயங்கரமான செயல்களைச் செய்யட்டும்.

5 உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்; நாடுகள் உமது பாதத்தின்கீழ் வீழ்ச்சியடையட்டும்.

6 இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்; நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும்.

7 நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்; ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார்.

8 உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம் ஆகியவற்றின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. யானைத் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகளிலிருந்து வரும், கம்பியிசைக் கருவிகளின் இசை உம்மை மகிழ்விக்கிறது.

9 உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள். அரச மணமகளோ, ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.

10 மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி: உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

11 அரசர் உன் அழகில் பிரியப்படுவார்; அவரே உனது யெகோவா, ஆதலால் அவரை கனம்பண்ணு.

12 தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்; செல்வந்தர் உன் தயவை நாடுவார்கள்.

13 இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்; அவளுடைய உடை தங்கச் சரிகையாயிருக்கிறது.

14 அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு அரசனிடம் அழைத்துச் செல்லப்படுகிறாள்; அவளுடைய தோழியர்களாகிய கன்னியர்கள் அவளைத் தொடர்ந்து உம்மிடம் அழைத்து வருகிறார்கள்.

15 அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் அவர்கள் அரசனின் அரண்மனைக்குள் வருகிறார்கள்.

16 உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்; அவர்களை நீர் நாடு முழுவதிலும் இளவரசர்களாகும்படி செய்வீர்.

17 நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும் உம்மைக் குறித்த நினைவுகளை நிலைபெறச் செய்வேன்; அதினால் மக்கள் கூட்டம் உம்மை என்றென்றைக்கும் துதிப்பார்கள்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy