சங்கீதம் 4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022சங்கீதம் 4 கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 1 நீதியுள்ள என் இறைவனே, நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும். 2 மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்? 3 யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார். 4 நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள். 5 நீதியான பலிகளைச் செலுத்தி, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள். 6 “எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும். 7 தானியமும் புதுத் திராட்சை இரசமும் நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர். 8 நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; ஏனெனில் யெகோவாவே, நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர். |
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.
Biblica, Inc.