Online Bible

- Reklamy -

சங்கீதம் 38 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


சங்கீதம் 38
நினைவுகூருதலுக்கான விண்ணப்பமாகிய தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்; உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும்.

2 உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன; உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது.

3 உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.

4 நான் தாங்கமுடியாத சுமையைப்போல என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று.

5 என் மதிகேட்டினால் எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

6 நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்; நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன்.

7 எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; என் உடலில் சுகமே இல்லை.

8 நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்; உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன்.

9 யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை.

10 என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது; என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று.

11 எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள்.

12 என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்; நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள்.

13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.

14 காது காதுகேட்காதவனும், தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன்.

15 யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும்.

16 “என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்; அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன்.

17 நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

18 என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்; என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன்.

19 காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்; எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.

20 நான் நன்மையானதைச் செய்தபோதும், நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள் என்னைக் குற்றப்படுத்துகிறார்கள்.

21 யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம்.

22 என் இரட்சகராகிய யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy