Online Bible

- Reklamy -

சங்கீதம் 32 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


சங்கீதம் 32
மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.

1 யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

2 யாருடைய பாவத்தைக்குறித்து, அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ, யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

3 நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது, தினமும் என் அழுகையினால், என் எலும்புகள் பலவீனமாயிற்று.

4 இரவும் பகலும் உமது கரம் பாரமாயிருந்தது; ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல, என் பெலன் வறண்டுபோயிற்று.

5 அதின்பின் நான் என் பாவத்தை உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்; என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை. நான், “யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்” என்று சொன்னேன்; நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர்.

6 ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில் உம்மை நோக்கி மன்றாடட்டும்; பெருவெள்ளம் எழும்பும்போது நிச்சயமாய் அது அவர்களை அணுகாது.

7 நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்; நீர் என்னை இக்கட்டிலிருந்து பாதுகாத்து, மீட்பின் பாடல்களால் என்னைச் சூழ்ந்துகொள்வீர்.

8 யெகோவா சொல்கிறதாவது: “நான் உனக்கு அறிவுறுத்தி, நீ போகவேண்டிய வழியை உனக்குப் போதிப்பேன்; நான் உனக்கு கரிசனையோடு ஆலோசனை சொல்லுவேன்.

9 புத்தியில்லாத குதிரையைப் போலவோ, கோவேறு கழுதையைப் போலவோ நீ இருக்கவேண்டாம்; கடிவாளத்தினால் கட்டுப்படுத்தப்பட்டால் ஒழிய, அவை உன் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை.”

10 கொடுமையானவனுக்கு வரும் கேடுகள் அநேகமானவை, ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறவனையோ, அவருடைய உடன்படிக்கையின் அன்பு சூழ்ந்துகொள்கிறது.

11 நீதிமான்களே, நீங்கள் யெகோவாவிடம் களிகூர்ந்து மகிழுங்கள்; உள்ளத்தில் உண்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் துதி பாடுங்கள்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy