சங்கீதம் 16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022சங்கீதம் 16 மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம். 1 இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும், ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன். 2 நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா; உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை” என்று சொன்னேன். 3 நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள் என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன.” 4 பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும். இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்; அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன். 5 யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்; எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர். 6 எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு. 7 எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது. 8 யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன். 9 ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும். 10 ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். 11 வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்; உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும், உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர். |
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.
Biblica, Inc.