Online Bible

- Reklamy -

சங்கீதம் 140 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


சங்கீதம் 140
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்; வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.

2 அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள்.

3 அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.

4 யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.

5 பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள்.

6 யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.

7 ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும்.

8 யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.

9 என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும்.

10 எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும்.

11 அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும்.

12 யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன்.

13 நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy