Online Bible

- Reklamy -

நீதிமொழி 14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டுகிறாள்; ஆனால் அறிவில்லாதவளோ தன் கைகளினாலேயே அதை இடித்துப்போடுகிறாள்.

2 நேர்மையான வழியில் செல்கிறவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறார்கள், அவரை அசட்டை பண்ணுகிறவர்கள் தங்கள் வழிகளில் மாறுபாடுள்ளவர்கள்.

3 மூடரின் பெருமையான பேச்சு அவர்களுடைய முதுகுக்கே பிரம்படி; ஆனால் ஞானிகளின் உதடுகளோ அவர்களைப் பாதுகாக்கும்.

4 எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; ஆனால் எருதின் பலத்தினால் மிகுந்த அறுவடை உண்டு.

5 மெய்ச்சாட்சிக்காரர் பொய்ப் பேசமாட்டார்கள், ஆனால் பொய்சாட்சிக்காரர் மூச்சுக்கு மூச்சு பொய்ப் பேசுவார்கள்.

6 ஏளனம் செய்பவர்கள் ஞானத்தைத் தேடியும் அதைக் கண்டுபிடிப்பதில்லை, ஆனால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கோ புத்தி இலகுவாக வருகிறது.

7 மூடரின் வழியைவிட்டு விலகியிரு, ஏனெனில் அவர்களுடைய உதடுகளில் நீ அறிவைக் காணமாட்டாய்.

8 தங்கள் வழியைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே விவேகிகளின் ஞானம், ஆனால் மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

9 பாவத்திற்கு பரிகாரம் செய்வதை மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், ஆனால் நீதிமான்களின் மத்தியில்தான் அதற்கு நல்லெண்ணம் காணப்படுகிறது.

10 ஒவ்வொரு இருதயத்தின் கசப்பும் அதற்கு மட்டுமே தெரியும்; அதின் மகிழ்ச்சியையும் வேறு யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது.

11 கொடியவர்களின் வீடு அழிக்கப்படும், ஆனால் நீதிமான்களின் கூடாரமோ செழித்தோங்கும்.

12 மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.

13 சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம்.

14 பின்வாங்கிப் போகிற இருதயமுள்ளவர்கள் தங்கள் வழிகளுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்கள்; நல்லவர்கள் தங்களுடைய வழிகளுக்கான வெகுமதியைப் பெறுவார்கள்.

15 அறிவில்லாதவர்கள் எதையும் நம்புகிறார்கள்; ஆனால் விவேகமுள்ளவர்கள் தங்கள் நடைகளைக் குறித்துக் கவனமாயிருப்பார்கள்.

16 ஞானமுள்ளவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, தீமைக்கு விலகி நடக்கிறார்கள்; ஆனால் மூடர்கள் மோசமான மனநிலையிலிருந்தும் பாதுகாப்பாய் உணர்கிறார்கள்.

17 முன்கோபக்காரன் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறான்; தீயத் தந்திரமுள்ளவன் வெறுக்கப்படுகிறான்.

18 அறிவற்றவர்கள் மூடத்தனத்தை உரிமையாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் விவேகிகளுக்கு அறிவு மகுடமாயிருக்கிறது.

19 தீயவர்கள் நல்லவர்கள் முன்னும், கொடியவர்கள் நீதிமான்களின் வாசல்களிலும் விழுந்து பணிவார்கள்.

20 ஏழைகள் தங்கள் அயலவர்களாலும் வெறுக்கப்படுகிறார்கள்; ஆனால் செல்வந்தர்களுக்கோ அநேக சிநேகிதர்கள் உண்டு.

21 தன் அயலாரை அலட்சியம் செய்வது பாவம்; ஏழைகளுக்கு இரங்குகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

22 தீமைக்காக சதிசெய்கிறவர்கள் வழிதப்பிப் போவார்கள் அல்லவா? ஆனால் நன்மையைத் திட்டமிடுபவர்கள் அன்பையும் உண்மையையும் கண்டுகொள்கிறார்கள்.

23 கடும் உழைப்பெல்லாம் இலாபத்தைக் கொண்டுவரும்; ஆனால் வெறும் பேச்சோ ஏழ்மைக்கே வழிநடத்தும்.

24 ஞானிகளின் செல்வமே அவர்களுக்கு மகுடம், ஆனால் மூடர்களின் மடமை மூடத்தனத்தையே பிறப்பிக்கிறது.

25 மெய்ச்சாட்சி உயிர்களைக் காப்பாற்றுகிறது, ஆனால் பொய்ச்சாட்சி ஏமாற்றுகிறது.

26 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு; அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம்.

27 யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது.

28 அதிக மக்கட்தொகை அரசனின் மகிமை, ஆனால் குடிமக்கள் குறைய இளவரசன் அழிந்துவிடுவான்.

29 பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்; ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

30 மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது; ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது.

31 ஏழைகளை ஒடுக்குகிறவர்கள் அவர்களைப் படைத்தவரை அவமதிக்கிறார்கள்; ஆனால் ஏழைகளுக்குத் தயவு பண்ணுகிறவர்கள் இறைவனைக் கனம்பண்ணுகிறார்கள்.

32 பேரழிவு வரும்போது கொடியவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்; ஆனால் நீதிமான்களோ மரணத்திலும் இறைவனில் புகலிடம் தேடுகிறார்கள்.

33 பகுத்தறிகிறவர்களின் இருதயத்திலே ஞானம் தங்கியிருக்கிறது; மூடர்களிடம் அதற்கு வாய்ப்பில்லை.

34 நீதி ஒரு நாட்டையே உயர்த்தும், ஆனால் பாவம் எந்த மக்களுக்கும் அவமானம்.

35 ஞானமுள்ள பணியாளனால் அரசன் மகிழ்ச்சி அடைகிறான், ஆனால் வெட்கத்திற்குரிய பணியாளன் அரசனின் கடுங்கோபத்திற்கே உள்ளாகிறான்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy