ஏசாயா 18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022எத்தியோப்பியாவுக்கு எதிரான இறைவாக்கு 1 எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால், இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு! 2 இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல் கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது. விரைந்து செல்லும் தூதுவர்களே, உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள். இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. 3 உலகத்தில் வாழ்பவர்களும், பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும் மலைமேல் கொடியேற்றப்படும்போது, அதைக் காண்பீர்கள். எக்காளம் முழங்கும்போது அதைக் கேட்பீர்கள். 4 யெகோவா என்னிடம் கூறுவது இதுவே: “சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும், அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும் நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்.” 5 ஏனெனில் அறுவடைக்குமுன், திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது, யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும், படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார். 6 அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்; பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும், காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும். 7 உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடமிருந்து சேனைகளின் யெகோவாவுக்கு அந்நேரத்தில் கொடைகள் கொண்டுவரப்படும். இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடைகள் சேனைகளின் யெகோவாவினுடைய பெயருக்குரிய இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டுவரப்படும். |
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.
Biblica, Inc.