Online Bible

- Reklamy -

ஏசாயா 15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


மோவாபைப் பற்றிய இறைவாக்கு

1 மோவாபைப் பற்றி கூறப்பட்ட இறைவாக்கு: ஒரே இரவில் மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் அழிக்கப்பட்டுப் பாழாயிற்று. மோவாபிலுள்ள கீர் பட்டணமும் ஒரே இரவில் அழிக்கப்பட்டுப் பாழாயிற்று.

2 தீபோன் மக்கள், அதன் மேடுகளிலுள்ள கோவில்களுக்கு அழுவதற்கென்று போயிருக்கிறார்கள். மோவாப் மக்கள் நேபோவைக் குறித்தும், மேதேபாவைக் குறித்தும் புலம்புகிறார்கள். ஒவ்வொருவருடைய தலையும் மொட்டையடிக்கப்பட்டு, ஒவ்வொருவருடைய தாடியும் சிரைக்கப்பட்டிருக்கிறது.

3 அவர்கள் துக்கவுடையை உடுத்தியபடி வீதிகளில் நிற்கிறார்கள்; வீட்டுக் கூரைகள் மேலும், பொதுமக்கள் கூடும் சதுக்கங்களிலும் புலம்புகிறார்கள். அவர்கள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.

4 எஸ்போனியரும், எலெயாலேயரும் கூக்குரலிட்டு அழுகிறார்கள், அவர்களுடைய குரல் யாகாசுவரை கேட்கிறது. ஆகவே மோவாபியரில் ஆயுதமணிந்தவர்களும் கதறி அழுகிறார்கள்; அவர்கள் இருதயங்கள் சோர்ந்திருக்கின்றன.

5 எனது உள்ளம் மோவாபியருக்காக அழுகிறது; அவர்களுடைய அகதிகள் சோவார் வரைக்கும், எக்லத் ஷெலிஷியாவரைக்கும் தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் லூகித் மலைச்சரிவுகளில் அழுதுகொண்டே ஏறுகிறார்கள். ஒரொனாயீமின் வழியில் தங்கி பட்டணத்தின் அழிவைப்பற்றிப் புலம்புகிறார்கள்.

6 நிம்ரீமின் நீர்நிலைகள் வற்றிப்போயின; புல்லும் வாடிப்போயிற்று, பசுமையும் இல்லாமல் போயிற்று. பசுமையான எதுவுமே மீதியாய் விடப்படவில்லை.

7 ஆகவே அவர்கள் தேடிச் சேர்த்த செல்வத்தை, அலறிகளின் ஆற்றுக்கு அப்பால் தூக்கிச் செல்கிறார்கள்.

8 அவர்களுடைய வேதனைக் குரல் மோவாப் எல்லையெங்கும் கேட்கிறது; அவர்களுடைய அலறும் சத்தம் எக்லாயீம்வரை எட்டுகிறது. அவர்களுடைய புலம்பல் பீர் ஏலீம் வரையும் கேட்கிறது.

9 தீமோன் பட்டணத்தின் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பியிருக்கின்றன. ஆனால் நான் தீமோனின்மேல் இன்னும் அதிக வேதனையைக் கொண்டுவருவேன். மோவாபிலுள்ள அகதிகள்மீதும், நாட்டில் மீதியாய் இருப்பவர்கள்மீதும் சிங்கத்தை ஏவிவிடுவேன்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy