சங்கீதம் 8 - பரிசுத்த பைபிள்கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம். 1 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது! விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது. 2 பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும். உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர். 3 கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன். நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன். 4 ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்? ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்? ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்? 5 ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர். 6 நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர். 7 ஆடுகள், பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர். 8 வானத்துப் பறவைகளையும் சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர். 9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும், மிகவும் அற்புதமானது! |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International