சங்கீதம் 3 - பரிசுத்த பைபிள்தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு. 1 கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர், பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர். 2 பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர். 3 ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை. கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்! 4 நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார். 5 நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்! 6 ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும். ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்! 7 கர்த்தாவே, எழும்பும்! எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக! நீர் வல்லமையுள்ளவர்! என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும். 8 கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும். |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International