சங்கீதம் 24 - பரிசுத்த பைபிள்தாவீதின் பாடல். 1 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை. உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம். 2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார். ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார். 3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்? கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்? யார் அங்கு வழிபட முடியும்? 4 தீயவை செய்யாத ஜனங்களும், பரிசுத்த இருதயம் உடையோரும், பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப் பயன்படுத்தாதோரும், பொய்யும், பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும். 5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள். 6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள். யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள். 7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே! திறவுங்கள்! மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார். 8 யார் இந்த மகிமைமிக்க ராஜா? கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர். கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன். 9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே, திறவுங்கள்! மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார். 10 யார் அந்த மகிமை மிக்க ராஜா? சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா. அவரே மகிமை மிக்க ராஜா. |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International