சங்கீதம் 146 - பரிசுத்த பைபிள்1 கர்த்தரை துதி! என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! 2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன். என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன். 3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள். ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது. 4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள். அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும். 5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள். 6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார். கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார். 7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார். தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார். சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார். 8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார். தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார். கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார். 9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார். விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார். ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார். 10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்! சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்! கர்த்தரைத் துதியுங்கள்! |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International