சங்கீதம் 124 - பரிசுத்த பைபிள்ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல். 1 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு. 2 ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? 3 கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். 4 நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும், நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும் நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும். 5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும் தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள். 6 கர்த்தரைத் துதியுங்கள்! நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்கு கர்த்தர் அனுமதிக்கவில்லை. 7 வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம். வலை அறுந்தது, நாம் தப்பினோம். 8 நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது. கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார். |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International