சங்கீதம் 5 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்சங்கீதம் 5 புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல். 1 யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், என்னுடைய தியானத்தைக் கவனியும். 2 நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 3 யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 4 நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 5 வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர். 6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; கொலை வெறியர்களையும் வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார். 7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 8 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். 9 அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். 10 தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே. 11 உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக. 12 யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர். |
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Bridge Connectivity Solutions Pvt. Ltd.