சங்கீதம் 141 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்சங்கீதம் 141 தாவீதின் பாடல். 1 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு விரைந்துவாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும். 2 என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும். 3 யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்; என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். 4 அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி என்னுடைய இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்; அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக. 5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன். 6 அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து தள்ளப்பட்டுபோகிறபோது, என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள். 7 பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. 8 ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும். 9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும். 10 துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன். |
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Bridge Connectivity Solutions Pvt. Ltd.