Online Bible

- Reklamy -

நீதிமொழி 10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்


அத்தியாயம் 10 சாலொமோனின் நீதிமொழிகள்

1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.

2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.

6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.

8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.

9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.

11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.

13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.

16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.

19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.

22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.

23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;

26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.

28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.

29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.

30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.

31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.

32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.

TAM-IRV

Creative Commons License

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Následuj nás:



Reklamy